Sunday, November 19, 2006

<<>>8.ராம்பாடா...!<<>>

8
ராம்பாடா சின்னக் கிராமம்தான். சாலைக்கு இருமருங்கிலும் தேனீர்க் கடைகள்.அங்கங்கே பனிக்கட்டி கரைந்து சிற்றோடைகளாக ஏதோ சேதிசொல்லப் புறப்பட்டசேடிப்பெண்கள் போல ரொம்ப ஒயிலாகத்தான் இங்குமங்கும் சென்றுகொண்டிருந்தன.இளைப்பாறல் அளவு மீறினால் களைப்பாக மாறிவிடும் என்பதை யாத்ரிகள்அறிவார்கள். எனவே, பிரயாசையுடன், தளர்ந்திருந்த உடலை மறுபடிகூட்டிக்கொண்டு, சற்றே கழற்றி வைத்திருந்த கம்பளிக் கவசங்களைத் தட்டிஅணிந்துகொண்டு கிளம்பினோம்.எதிரே, மிக உயரத்தில் எங்கோ ஒரு மலைப்பாதை தெரிகிறது. அதில் நடந்தும்,குதிரைகளிலும் சிலர் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எங்கேபோகிறார்கள் என்ற என் யோசனை என் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்ததோஎன்னமோ, குதிரைப்பயல் சிரித்தபடிச் சொன்னான், 'அதுதான் நாம் போக வேண்டியபாதை,' என்று. தொலைவிலிருந்து பார்க்கும்போது உயரம் பிரமிப்பாகஇருக்கிறது. இதோ இங்கேதான் என்று தோன்றுவன நடக்க நடக்க நம்மைப்பரிகசித்தபடி மேலும் விலகுவதுபோல் தோற்றமளிக்கின்றன.

காலறியாமல்உயர்கிறது பாதை;
கம்பலை போல இறைக்கிறது மூச்சு.
காதறியாத மெளனத்தின்பேச்சு;
கடவுள், தேடினால் கண்ணாமூச்சு!
அட! கவிதைபோல் தொனிக்கிறதே!வளைத்துப் போடுவோமா?காலறியாமல் உயர்கிறது பாதை
கம்பலை போல இறைக்கிறது
மூச்சு காதறியாத மெளனத்தின்
பேச்சுகடவுள், தேடினால் கண்ணாமூச்சு!

பாதை கோரினால் தொலைவு நிச்சயம்
வாதை மிகுந்த பயணம் நிரந்தரம்
கலவியில் இரண்டும் ஒன்றும் இல்லை
கடலுட் சென்றபின் நதியே இல்லை!

ஒவ்வோ ரடியாய் உணர்ந்து நடந்தால்
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சிகரம்
ஒவ்வொரு சிகரமும் ஒவ்வொரு துவக்கம்
உண்மையில் நடைதான் உயிருக் கிலக்கம்!

சுழன்று கொண்டே இருக்கும் புவியில்
சும்மா இருந்தும் தொடரும் பயணம்
முடிவறியாமல் முதல்புரியாது
முன்னுள் ளவரை பின் தொலையாது

முகவரி யற்ற வீட்டைத் தேடி
தகவ லற்ற தடத்தில் பயணம்
வானம் அதற்கு வாச லென்றபின்
வழிதொலைந்தது; வம்பு தொடர்ந்தது..

ஒளி, மங்கிக்கொண்டே வருகிறது. உதிர்ந்து கிடந்த திரியை,
உணர்வென்னும்காற்று நிமிர்த்தியது. வெட்டவெளியைக் கிழித்துவந்த
சின்னப் பொறியொன்றுதீபத் திலகமாய் வீற்றுச் சிரித்தது. என்னெதிரே காரிருள். எதிர் என்ற கருத்தும் தொலைந்த கருப்பு கப்பிக் கிடக்கிறது. என்னிடம் இருப்பது இதோஇந்தச் சின்னச் சுடர்தான். அதோ அங்கே என்ன இருக்கிறது என்பதை இதனால்தெரிவிக்க முடியாது. ஆனால்,

அடுத்த அடியை எடுத்துவைக்க
அகல்விளக்கு போதும்
எடுத்துவைக்க எடுத்துவைக்க
அடிகள் குறைந்துபோகும்
இறுதி வரையும் எந்தன் தீபம்
சின்னஞ் சிறிதாய் இருக்கும்
இலக்கை அடைந்து அமரும்போது
சற்றே சிரித்து நிலைக்கும்..

நின்ற இடத்திலிருந்து நேரே திரும்பியிருந்தால் என்றோ முடிந்திருக்கும்நடை!

வட்டத்தில், முதலும் முடிவும் ஒன்றுதானே. இருந்த இடத்தில் இருந்தால்போதுமென்பது நடந்து களைத்தால்தானே புரிகிறது!

அலைமோதும் எந்தன் அகவேட்கைக்கும், உடல்நோகும் இந்தப் புறப்பயணத்துக்கும்தான் எத்தனைபொருத்தம்!

இவை இரண்டும் கலந்து தவிர்ந்து போகும் தருணம் புலப்படும்அமைதியாய், அதிசயமாய், அனைத்துமாய் அதோ அசையாமல் வீற்றிருக்கிறது சிவம்!
வீதியற்ற பாதையின் வெளிச்சமற்ற விளக்குகளைத் தாண்டி நாதியற்ற குதிரைகளைவிட்டிறங்கி நமசிவாயனை நினைத்தபடி நகர்த்தப்பட்டேன்..

புடைத்த சிகரமேலிங்கமாய்ப் புலித்தோல் போர்த்துத் திகழ்கிறது..மாறிமாறி அதே இடத்தில்கோவில். தலமே முக்கியம்; கோவிலன்று. காதலுக்குக் கவிதை முக்கியமன்று;காதலுக்குக் காதல்தான் உயிர்; கவிதை உடம்பு. மஞ்சள் விளக்கொளியில் மாறாதகடுங்குளிரில், நெஞ்சைக் கவர்ந்து நினைவெல்லாம் திருடிக்கொண்டு, உயிர்கொஞ்சத் துடிக்கின்ற கோலவெழிலை, குலவக் குலவக் குழைந்து குழைந்து குழையவைக்கும் உயிர்க்கினிய காதற்காந்தத்தை என் கண்ணாரக் கண்டுகொண்டேன்!
வான்அளாவும் நீலமேனி.! வளரும் வெற்பைப் போன்ற சடைகள்! கானமாய்க்கலகலக்கும் கங்கை! கணங்கள் உதிரும் கவி உடுக்கு!தேனவாவும் சுத்த சித்தம்! திரையிலாத புதிரின் உச்சம்!நான்கரைந்தேன் கண்ணின் முன்னே! நான்முடிந்தேன் கவிதை போலே..பிச்சையேந்தும் சாதுக்கள், காலைக்கதிரின் முதற்கிரணங்கள் முத்தமிட்டுப்பொன்துலங்கும் கோவிலுக்குப் பின்னிருக்கும் பனிச்சிகரம், புதிதாய்ப்பாவடை கட்டிக்கொண்ட சின்னஞ் சிறுமியைப்போல் பாறைகளிடையே சலங்கை கொஞ்சக்கலகலத்துவரும் பனியோடை, எங்கோ கேட்கும் உடுக்கு, கண்ணைப் பறிக்கும்நீலம், புன்னகையே முகமாய்க் கடைக்காரர்கள், கஞ்சாப் புகையில் காலம்மக்கிய கனவுமுகம், சாம்பலே ஆடையாய்த் திரியும் துறவி, அந்த இடத்தில்முளைத்த கல்லாய் அசையாது அமர்ந்திருக்கும் அகோரி, தன்னை மீரா என்றுசொல்லிக்கொள்ளும் ஒரு முதிய துறவி, சிறுநாகம்போல் நெளியும் ஜ்வாலைமுன்குறுநகை தவழ வீற்றிருக்கும் நாகா, மூக்கும் கால்களும் மஞ்சளாய்அண்டங்காக்கை, கால்வைக்க முடியாமல் குளிரும் கல்பதித்த பிராகாரம், இளையசூரியனின் கர்வம், கண்கொட்டாமல் நமசிவாயனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும்நந்தி, ஈரக்காற்றில் மிக நிதானமாய் அசையும் காவிக்கொடி, பரபரப்புடன்உள்ளே நுழையும் பக்தர்கள், எண்ணற்ற பிரார்த்தனைகள், கணக்கற்ற தேவைகள் யாவும் கலந்து ஒன்றான காட்சிதான் நான் கண்ட தரிசனம்.

அங்கே எனக்குக் கோரிக்கைகள் நேரவில்லை. புத்தியைப் பயன்படுத்தி வாக்கியங்களைக் கோத்து விழையும் வரங்கள், முத்தியல்லாமல் வேறேதோ முட்டும் ஆசைகள், அவற்றால் நேரும் குற்ற உணர்வு, இவையெல்லாம் நமக்கே ஒத்துவராதபோது இறைவனைத் தொடுமா?

தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். குமிழிகள் ஒன்றன்பின் ஒன்றாய்உடையவும், விட்டுப் புறப்பட்ட ஆவி ஒரு நடனக்காரியின் லாவண்யத்தோடு வளைந்து நெளிந்து வெளியில் கலக்கவும், என்னை விட்டுப் பிரிந்தன கருத்துக்கள், சித்தாந்தங்கள், அபிப்பிராயங்கள், வேட்கைகள்எல்லாம்....மிடறு விழுங்கிக் கொள்கிறேன். தேனீரின் இளஞ்சூடு நெஞ்சில்பரவுகிறது. நிம்மதியின் உதயத்தில் ஆர்பாட்டம் ஏது?

பனியும், தூசும்சேர்ந்து கப்பிக் கிடக்கும் கண்ணாடி டம்ளர். இருப்பினும், தன்னைத்தொட்டுச் சென்ற கதிரின் கிரணத்தை வாங்கிவைத்துக்கொண்டு மகிழ்வில்ஒளிர்கிறது; புதிய முத்தம் பெற்ற பழைய கைதிபோல்!எழுந்தேன்.

தும் துது தும் தும் துது தும் என்று பெரிய பறை முழங்குகிறது.மிகப்பெரிய தாரையில் மெல்லிய ஒலி வருகிறது. எங்கிருந்தோ வந்த பக்தர்கள் ஒரேவிதமாக, பதட்டமில்லாத ஆட்டத்தில் ஈடுபட்டுத் தன்வயம் இழந்தவர்களாகக் கண்கள் மேலே செருகக் காட்சியளிக்கிறார்கள். இன்றைய கலைநடனம் என்பது அந்தவெட்டவெளி நடனத்தின் அற்பப் பிரதிபலிப்புத்தான் என்ற குருநாதரின் வார்த்தை காதில் கேட்கிறது. சாதித்த உணர்வில்லை; சாதிக்கும் வெறியுமில்லை. ஏக்கமில்லை. ஏற்றஇறக்கங்கள் இனியுமில்லை. அவனாய்க் கிளம்பி, இவனாய்த் திரிந்து சிவனில்கலந்தது சித்தம்.திரும்பி வந்தால்தானே திரும்பிவந்த கதையைச் சொல்ல முடியும்?

OoO.முற்றும்.OoO

1 comment:

cerenityblossoms said...

Kala

engeyoo poiyeetenga.


che.... manasai thotututeenga kala

ellam unmai.anubavam pesugiradhu

when experience talks, it comes from that pure level of awareness..

GREAT