Wednesday, November 15, 2006

<<>>பூரணத்தை அறிய ஒரு யாத்திரை..1<<>>

*"இமயத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை தோன்றினால், அங்கிருந்து அழைப்பு வந்திருக்கிறது
என்று புரிந்துகொள்," *என்றோர் பழைய வாசகம் இருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால்
புரிகிறது. வினாக்குறியோடுதான் விதையும் முளைக்கிறது. அது,
பதிலைத் தன்னெஞ்சில் சுமந்தபடிதான் பரந்த உலகத்தைப் பார்த்து விழிக்கிறது. கேள்வியால்
விழிப்புற்றது; விரிகிறது; விடை எங்கோ பின்னணிக்குச் சென்றுவிடுகிறது. எழுந்த
கேள்விக்குத் துளியேனும் விடைதெரியாமல் எந்தக் கேள்வியும் எழுவதில்லை. விந்தை
என்னவென்றால், வினா என்பது விடையின் அறிகுறியே!
எனவே, எது அழைக்கிறதோ அதைத்தான் நாம் தேடுகிறோம். எது இருக்கிறதோ, அதைத்தான் நாம்
கோருகிறோம்.

ஆன்மீகத்தின் துவக்கமும், முடிவும் இதுதான்! வட்டத்தில் எது முதல்? எது முடிவு? நின்ற
இடத்திலிருந்து நேரே திரும்பினால் முதலேது முடிவேது? அடையாளங்கள் தீர்ந்து, முகவரிகள்
தொலைந்து, ஆள் என்னும் எண்ணம் தவிர்ந்து, அந்தரங்கத்தின் சத்தியம் அம்பலமாகிறது.

இருந்த இடத்தில் இருந்தபடி, வானில்
பரந்து வரலாம் பழகு

என்கிறது என் குறள்.

*"பாதையைக் கோரிய கணமே தொலைவை நீயே ஏற்படுத்தி விடுகிறாய்," *என்பார் என் குருநாதர்.

இந்த உண்மை முதலில் எண்ணமாய்த் தோன்றி, பின் இயல்பாய்ப் பரிமளிக்கும் வரை, யாத்திரைகள்
அவசியமாகின்றன. உட்காரும் வரை, தேடிச்செல்லல் இயல்பே! உட்கார்ந்த பின்னே,
உண்மையில் திளைத்திருப்பது இயல்பே! இவையிரண்டுமே மாறிமாறி நிகழ்வது யாத்திரையில்
இயல்பே!

ஊர்சுற்றுவது வேறு; யாத்திரை செய்வது வேறு. ஒன்று, பொழுது போக்குவதற்காக;
மற்றொன்றோ, பூரணத்தை அறிவதற்காக. எனவே, யாத்ரியின் மனநிலை தனித்துவம் வாய்ந்தது.
ஒருமுனைப் பட்டது. முடிவை அறிந்து முன்னேறுவது.

மேலும், யாத்திரையில் பலவற்றையும் கற்க வாய்ப்பிருக்கிறது. மாறும் மொழிகள், தட்பவெப்ப
நிலைகள், இயற்கை வளங்கள், விலங்கினங்கள், சரித்திரம், மனித குணசித்திரத்தின்
விசித்திரங்கள் இன்னும் பலப்பலவற்றையும் புலனாக்கும் யாத்திரை. மேலோட்டமான
வேறுபாடுகளும், அடிநாதமான ஒருங்கினைப்பும் சேர்ந்த அதிசயமே பாரதத்தின் பண்பாடு
என்பதைப் புரியவைப்பது யாத்திரை. அந்தப் பண்பாட்டுக்கு மறுபெயர் ஆன்மீகம். *"பிற
நாடுகளில், பண்பாடு மதத்தின் ஒரு பகுதி; பாரதத்திலோ மதங்கள் பண்பாட்டின் பகுதிகளே,"
*என்பார் என் குருநாதர்.

ஆம்; ஆன்மீகம் மதங்கள் தோன்றத் தோதாயிருக்கலாம். ஆனால், அது மதங்களுக்கு அப்பாற்பட்டது,
முரணானதல்ல என்றாலும்! *"எங்கே மதம் முடிகிறதோ, அங்கே ஆன்மீகம் தொடங்குகிறது."*
**
பாரதம் வெறும் மண்ணல்ல. அது திருக்கோவில். ஆதியந்தமற்ற அறமே அதில் உறையும் தெய்வம்.
இந்த உணர்வுடன் நாட்டை வலம்வருவோன் யாராயினும், அவன் விடுதலை எய்துகிறான்.

அகவேட்கையின் புறவிளைவே யாத்திரை. எண்ணங்களின் ஏற்ற இறக்கங்களைப் போலவேதான், புற
யாத்திரையும்! காடுமலை மேடுகள்! கடக்கத் தொடரும் தொலைவுகள்! கால்துவண்ட போதும்,
கண்பனிக்க வைக்கின்ற காட்சிகள்! இறுதி இலக்கு அமைதி என்று குறித்தபின்பு, இன்பத்தையும்,
துன்பத்தையும் யார் பொருட்படுத்தப் போகிறார்கள்?!

இன்பம் நிலையற்றது எனில், துன்பம் மட்டும் நிலையானதோ?

இந்த மனநிலையோடு பயணித்து, அதுவே இயல்பாகி மனைதிரும்புகிறான் யாத்ரி.


ரமணன்

No comments: